யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
30 வருடங்களாக நம்மை மகிழ்வித்து பல நல்ல நினைவுகளை நமக்கு கொடுத்த கார்ட்டூன் நெட்வொர்க் அதிகாரபூர்வமாக மூடப்பட்டது எனப் பரவும் செய்திகள்!
பரவிய செய்தி
30 வருடங்களாக நம்மை மகிழ்வித்து பல நல்ல நினைவுகளை நமக்கு கொடுத்த கார்ட்டூன் நெட்வொர்க் நேற்று அதிகாரபூர்வமாக மூடப்பட்டது.

விரிவான விளக்கம்
கார்டூன் நெட்வொர்க் என்பது 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வார்னர் பிரதர்ஸ்க்கு சொந்தமான ஒரு அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனல். டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் போன்ற 90's கிட்ஸ்களுக்கு அபிமான பல கார்ட்டூன் நிகழ்ச்சிகள் இதில் தான் ஒளிபரப்பப்பட்டன.
இந்நிலையில் "30 வருடங்களாக நம்மை மகிழ்வித்து பல நல்ல நினைவுகளை நமக்கு கொடுத்த கார்ட்டூன் நெட்வொர்க் நேற்று அதிகாரபூர்வமாக மூடப்பட்டது" என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை இந்தியா முழுவதும் பலரும் #RIPcartoonnetwork என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி பரப்பி வருவதையும் காண முடிகிறது.
கார்ட்டூன் நெட்வொர்க் நேற்று அதிகாரபூர்வமாக மூடப்பட்டது..! 💔#Cartoonnetwork pic.twitter.com/4k4n1Hou4Q
— அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04) July 10, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், #RIPcartoonnetwork என்ற ஹேஷ்டேகை பயன்படுத்துங்கள் என்று கூறி முதன் முதலில், "Animation Workers Ignited" என்ற எக்ஸ் பக்கத்தில் தான் வீடியோ ஒன்று ஜூலை 09 அன்று பதிவு செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.
Cartoon Network is dead?!?!
— Animation Workers Ignited (@AWorkersIgnited) July 8, 2024
Spread the word about what’s at stake for animation!!! Post about your favorite Cartoon Network shows using #RIPCartoonNetwork
Active members of TAG can help by filling out your survey! Today (7/8) is the last day! pic.twitter.com/dHNMvA1q0A
கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் பல அனிமேஷன் நிபுணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, பல அனிமேஷன் நிபுணர்களும் ஒன்றிணைந்து கார்ட்டூன் நெட்வொர்க்கை கிண்டல் செய்யும் விதமாக 'Animation Workers Ignited' என்ற எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அந்த வீடியோவில் உங்களுக்கு பிடித்தமான கார்ட்டுன் நெட்வொர்க் சேனலின் நிகழ்ச்சியை குறிப்பிட்டு #ripcartoonnetwork என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி பதிவிடமாறும் கூறியிருந்தனர். இதை தொடர்ந்து தான் உலகம் முழுவதுமே #RIPcartoonnetwork என்ற ஹேஷ்டேக் உலகம் முழுவதும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் இது குறித்து ‘Hindustan Times’ வெளியிட்டுள்ள செய்தியில், “கார்டூன் நெட்வொர்க் அல்லது ஸ்டுடியோ மூடப்படும் என்ற வெளியான சமூக ஊடகங்களின் செய்திகளில் உண்மை இல்லை. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பல புதிய நிகழ்ச்சிகளுடன் உலகெங்கிலும் உள்ள எங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்குவிக்கும் புதுமையான உள்ளடக்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை கார்ட்டூன் நெட்வொர்க் Hindustan Times குழுவிடம் தெளிவுபடுத்தி உள்ளது” என்றும் குறிப்பிட்டு உள்ளது.

இதன் மூலம் கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி நிறுவனம் மூடப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க: MGM நிறுவன லோகோவில் கர்ஜிக்கும் சிங்கத்தின் பின்புற தோற்றம் | உண்மை என்ன ?
முடிவு:
நம் தேடலில், 30 வருடங்களாக நம்மை மகிழ்வித்து பல நல்ல நினைவுகளை நமக்கு கொடுத்த கார்ட்டூன் நெட்வொர்க் அதிகாரபூர்வமாக மூடப்பட்டது என்று #RIPcartoonnetwork என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.